சங்கரமடத்தின் 70ஆவது மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமி, ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள புனித மண் எடுத்து, விமானம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் ஆன்மிக ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது.
சரித்திர சான்றுகளுடனும், தொல்பொருள் சான்றுகளுடனும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூஜை நடைபெற உள்ளது.
ராமபிரானுக்கு கோயில் கட்டுவது எவ்வளவு அதீத முக்கியமோ, அதேபோல் கோமாதாவையும் காக்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் மத்திய, மாநில அரசாங்கங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு கோமாதாவை பாதுகாக்கும் விதத்தில் நம்முடைய நாட்டின் கௌரவம் ஒற்றுமை புனிதத் தன்மை மென்மேலும் வளரும்” என்று கூறியுள்ளார்.