காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் கை கழுவுவதற்கு குழாய்கள் அமைப்பது, நகர் முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
எனினும் காய்கறிச் சந்தை, மளிகைப் பொருள்கள் வாங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் அதிக மக்கள் கூடுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் நிறைய உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் தற்காலிக காய்கறிச் சந்தை, மளிகைப் பொருட்கள் விற்பனை கூடம் ஆகிய 3 இடங்களில் கிருமிநாசினி திரவம் தெளிக்கும் சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது.
காய்கறி சந்தை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதைகளை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பெஞ்சமின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்பு காய்கறிச் சந்தை, மளிகை பொருட்கள் விற்பனைக் கூடம் ஆகிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ’இருள் அகலும் ஒளி தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்’ - அதிமுகவின் ஈஸ்டர் வாழ்த்து