கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மட்டிகைக்குறிச்சி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தப் பகுதி மக்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றால் கோமுகி ஆற்றைக் கடந்துதான் இடுகாட்டிற்குச் செல்ல வேண்டும். இப்பிரச்னையில் இருந்து விடுபட, ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் அமைத்துத் தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் வசித்த திருமால் எனும் விவசாயி உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடந்து எடுத்து சென்றனர். பருவ மழை காலம் என்பதால், கோமுகி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதைப் பொருட்படுத்தாமல் இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்துகொண்டு, ஆற்றைக் கடந்து உடலை அடக்கம் செய்தனர். இதுதொடர்பான காணொலி வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இடுகாடு பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!