கள்ளக்குறிச்சி: தியாகதுருகம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை ஆகிய கள்ளக்குறிச்சியின் ஐந்து ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று(அக்.9) நடைபெற்று வருகிறது.
ஐந்து ஒன்றியங்களிலும் மொத்தமாக 1554 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 195 ஊராட்சி தலைவர்களும், 91 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தமாக 1,849 பதவியிடங்கள் உள்ளன.
இதில் 265 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 49 பேர், 88 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 337 பேர், 180 ஊராட்சி தலைவர் பதவிக்கு 605 பேர், 1308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4019 பேர் என மொத்தமாக 1,584 பதவி இடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மழையால் தாமதம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலையொட்டி, 198 மண்டல அலுவலர்கள், 6,393 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில் தேர்தலுக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஐந்து ஒன்றியங்களிலும் 950 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருவதால் வாக்கு செலுத்துவதில் பொதுமக்கள் தாமதமான சூழ்நிலையே நிலவி வருகிறது. குறிப்பாக தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஒன்றியங்களில் மழையின் காரணமாகவே வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தாமதமாக வருவதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 8 மாவட்டங்களில் கன மழை