ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற முதியவர் அந்த ஊரிலிருந்து ஈரோடு காய்கனி அங்காடிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். போதிய சில்லறை இல்லாமல் பயணிப்பதாக கூறிய நடத்துநர் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குமார் முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. பின்னர் நடத்துநர் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதியவர் கணேசன் சித்தோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நாளிதழில் வெளியான செய்தியைக் கொண்டு, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான ஏ. சித்தரஞ்சன் மோகன்தாஸ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளார். முதியவரை பேருந்து நடத்துநர் தாக்கிய சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசென்ற ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்!