ஈரோடு : மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 100 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டு, தலா 1 ஏக்கர் வீதம் 100 பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், நிலம் ஒதுக்கப்பட்டும் அரசு வழங்கிய நிதியில் எவ்வித மேம்பாடும் செய்யப்படவில்லையென்று கூறப்படுகிறது. மேலும் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம், தலித் அல்லாத மக்களின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தலித் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் பிற வகுப்பினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பினர், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வேண்டும், தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தங்கள் வகுப்பு மக்களுக்கே வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து முழக்கங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவுள்ளதாகவும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 8ஆம் தேதி மாவட்டம் தழுவிய நில மீட்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தலித் மாவட்டக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.