சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கெட்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (22). இவர் தாளவாடியிலிருந்து கெட்டவாடி நோக்கி தன் மினிவேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாளவாடியில் பலத்த காற்று காரணமாக செம்மண் புழுதிகிளம்பியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறி வாகனங்கள் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மினிவேனில் வந்த சுப்பிரமணி புழுதிமண்டத்தில் சிக்கி வழிதெரியாமல் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி வேனை நிறுத்தினார். இதில் சுப்பிரமணிக்கு காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.