ஈரோடு: ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கரையைப் பலப்படுத்தும் பணி
பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட உள்ளதால், கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைத்து கரையைப் பலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
கீழ்பவானி வாய்க்கால் விரிவாக்குதல், புதுப்பித்தல், பலப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாய்க்காலின் இருபுறக்கரைகளிலுள்ள புதர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும் வாய்க்காலின் பாலங்களில் மண் அரிக்காமல் இருக்க தானியங்கி கான்கிரீட் இயந்திரங்களின் மூலம் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக நீர் திறக்க இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், கரையைப் பலப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் துரிதப்படுத்தியுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் தலைப்பு மதகு, நேரிடை மதகுகள் சீரமைத்தல், பகிர்மான கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் துணி, நகை கடைகளை திறக்க அனுமதி