பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசியல் தலைவர்களின் தலையீடு இருப்பதால் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை பாதுகாக்க காவல்துறையினர் பொய்யான தகவலை பரப்பி வருவதாக கூறி தமிழகம் முழுவதும் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் இது சம்பந்தமாக தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எந்தவித எதிர்ப்பு குரலை தெரிவிக்காமல் அதிமுக அரசின் மீது ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கவே முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போலீசார் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி திண்டல் பேருந்து நிறுத்தம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் கடுமையான தண்டனைகள் அடங்கிய சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தொடர்ந்து மனிதசங்கிலி போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இவ்வழக்கில் கைது செய்யப்படாத முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் கோரிக்கைகளை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.