ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் முக்கிய வழித்தடமாக ஆசனூர் வனப்பகுதி இருப்பதால், யானைகள் அடிக்கடி மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.
கர்நாடகத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள், காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் அதிகமாக உள்ள கரும்புகளை சாலையில் கொட்டுவது வழக்கம். அதனை தின்று பழகிய யானைகள், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு கரும்பு லாரிக்காக காத்திருக்கின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களாக கரும்பு லாரிகளை எதிர்பார்த்து குட்டியுடன் வந்த யானை, நீண்ட நேரமாக காராப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நின்றிருந்ததது. அப்போது தாளவாடியில் இருந்து வந்த அரசு பேருந்துக்கு பின்புறம் நின்ற கரும்பு லாரியை தேடிப்போனது. கரும்பு லாரிக்கு முன்புறமாக நின்ற அரசு பேருந்து கண்ணாடியை நுகர்ந்து, கரும்பு உள்ளதா என நோட்டமிட்டது. கரும்பு இல்லையென தெரிந்ததும் பேருந்தை விட்டு விட்டு கரும்பு லாரிக்கு சென்று கரும்பை பறித்து சாப்பிட்டது.
தினந்தோறும் குட்டியுடன் தாய் யானை சாலையில் திரிவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். சாலையோரம் முகாமிடும் தாய் யானையை காட்டுக்குள் விரட்டினால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் இளநீரை திருடி தனிக்கடை போட்ட ரஜினிகாந்த்