தமிழ்நாட்டில் வருகின்ற 18ஆம் தேதி 17வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று மாலை 6 மணிக்கு தங்களது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தனர். இதேபோன்று ஈரோடு தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி கூட்டணிக் கட்சியினருடன் இருசக்கர வாகனத்தில் இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது, பெருந்துறை சாலை, குமலன்குட்டை, சூரம்பட்டிவலசு , சம்பத் நகர், மாணிக்கம் பாளையம் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக கணேசமூர்த்தி பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் தனது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார்.
இதேபோன்று இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் மணிமாறன் அரசு மருத்துவமனை சந்திப்பில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், மணிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் கருப்பணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சேகரித்தனர். மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்குமார் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார்.
மேலும், பரபரப்பாக நடைபெற்ற பிரதான கட்சி வேட்பாளர்களின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.