ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தற்போது அணையில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் இரவு முதல் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து 559 கன அடியாக வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 177 கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.33 அடியாகவும், நீர் இருப்பு 5.5 டிஎம்சியாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மெள்ள மெள்ள உயர வாய்ப்புள்ளதாக பாசனப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.