திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரி மதிய உணவு வேளையின்போது அவரைக் காணவில்லை எனத் தேடியுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மாணவியை ஆசிரியர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் சமையலறை அருகில் மாணவி உடல் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி உறவினர்கள் பாச்சலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை. தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்