திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பரமேஸ்வரன் என்பவரிடம் இருந்த செப்பு பட்டயம் குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த செப்பு பட்டயம், பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு திருமஞ்சனம் செய்ததற்காக, கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு வழங்கப்பட்ட கூலியைப் பற்றி கூறுகிறது.
நித்திய பூஜை
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி கூறும் போது, இந்த செப்பு பட்டயம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரால் எழுதப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு, நித்தியபூஜை செய்ததற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சன குடம் மெடுத்து, 120 வில்வ இலைகள், ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி உள்ளிட்டவைகளால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்ததற்கு கூலியாக, ஆண்டுக்கு 115 ரூபாய் வழங்க தீர்மானம் செய்து எழுதப்பட்டுள்ளது. இதற்கான தொகையை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
152 ஆண்டு பழமை
இந்த செப்பு பட்டம், தமிழ் வருடம் சாலிவாகன சகாப்தம் 1790ஆம் ஆண்டு ஆவணி 12ஆம் தேதி, ஆங்கில வருடம் 1868ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாளில் எழுதப்பட்டுள்ளது. 152 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த செப்பு பட்டயம், 25 செ.மீ., அகலமும், 45 செ.மீ., உயரமும், 2 கிலோ எடையும் கொண்டுள்ளது.
வேல், சூரியன் மற்றும் சந்திரன் உருவங்களும், சிவமயம், தண்டாயுதபாணி துணை என பொறிக்கப்பட்டுள்ள இந்த செப்பு பட்டயம், வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்த பட்டயத்தின் படி, கந்தசாமி பண்டாரம் தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்ததற்கு, அறை மற்றும் மடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புண்ணிய பாவ கணக்கு
அதேபோல, இந்த கோயிலுக்கு நன்மை செய்பவர்கள் கங்கை மற்றும் சண்முக நதியில் பூஜை செய்ததற்கு சமமாகும் என்றும், அதே நேரத்தில் கெடுதல் செய்பவர்கள் கங்கையில் காராம் பசுவை கொன்றவர்களுக்கும், தாய் தந்தையர்களை கழுத்தறுத்துக் கொன்றவர்களுக்கு சமமானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் தெரிவித்தார்.
இந்த பட்டயம் எழுதிக் கொடுக்கப்பட்ட கந்தசாமி பண்டாரத்தின், மகன் வழியில் 5ஆவது தலைமுறையைச் சேர்ந்த, பரமேஷ்வரன் என்பவரிடம் தற்போது இந்த செப்பு பட்டயம் உள்ளது. இந்த பட்டயத்தில் குறிப்பிட்டுள்ள கூலி தற்போது கொடுக்கப்படுவதில்லை என்றும், எப்போது அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது என்றும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் போது, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திய தொல்லியல் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், அஜய் கிருஷ்ணன், பிரசன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: போலி கணக்கு காட்டி ரூ.21 கோடி வரிப்பலன் பெற்ற இருவர் கைது!