கோயம்புத்தூர்: துடியலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, இமானுவேல், கோகுல்ராஜ் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்கு உள்பட்ட மூன்று சிறுமிகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இவர்கள் ஆறுபேரும் மூன்று இருசக்கர வாகனத்தில், கடந்த மாதம் 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் மகள்கள் வீடு திரும்பாததால், சிறுமிகளின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாயமான சிறுமிகளில் ஒருவர் துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். அதன் அடிப்படையில் துடியலூர் காவல் துறையினர், திண்டுக்கல் தோமையார்புரம் விரைந்து, முகமது அலி ஜின்னா என்பவர் வீட்டில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
காவல் துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்ற நிலையில், பொது மக்கள் உதவியுடன் காவல் துறையினர் அவர்களைப் பிடித்தனர். தொடர்ந்து, துடியலூரைச் சேர்ந்த சூர்யா, முகமது அலி ஜின்னா, இம்மானுவேல் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து சிறுமிகளை மீட்டனர்.
முதற்கட்ட தகவலில், சிறுமிகளை அழைத்து வந்த சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது முஹம்மது அலி ஜின்னா என்பது தெரியவந்தது. மற்றொரு சிறுமியுடன் தப்பி ஓடிய கோகுல்ராஜ் என்பவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா போதைக்கு அடிமையாக்கி இந்நபர்கள் சிறுமிகளைக் கடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி