திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே, நத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர், வேடசந்தூரில் நிதி நிறுவனமும், கதிர் என்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோவும் நடத்தி வந்தார்.
இவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டம் முடிந்ததும், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
மர்மம் நிறைந்த கொலை..!
இந்நிலையில், அவரது தோட்டத்தின் அருகே தலையில் காயங்களுடன், எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். மார்ச் 11ஆம் தேதி காலை, அவ்வழியாக சென்ற மக்கள், இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாலசுப்ரமணியின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக, வேடசத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாலசுப்ரமணி எரித்துக்கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வந்தனர்.
திடீர் திருப்பம்...
இந்நிலையில், அம்மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் முதலில் பாலசுப்ரமணியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். அதில், இவரது மகளுக்கும், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் பழக்கம் உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களது காதல் விவகாரம் பாலசுப்ரமணியனுக்கு தெரிய வந்ததை அடுத்து, கடந்த வாரம் சின்ன குளிப்பட்டியில் உள்ள விமல்ராஜ் வீட்டிற்குச் சென்று இனிமேல் எனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கண்டித்து வந்ததாகவும், பின்னர் மகளின் செல்போனை பிடுங்கி அவனுடன் இனி பேசக்கூடாது என்று போனை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்திய காவல்துறையினர், விமல்ராஜிடம் விசாரணை மேற்கொண்டர். ஆனால் விமல்ராஜ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் விமல் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், தங்களது பாணியில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திடுக்கிடும் தகவல்கள்...
அதில், காதல் விவகாரத்தை கண்டித்து, காதலியின் போனை உடைத்ததால், காதலியிடம் பேச முடியாமல் தவித்த விமல், தனது நண்பர்களிடம் இது குறித்து புலம்பியுள்ளார்.
நண்பன் புலம்பியதை கண்ட அதே பகுதியை சேர்ந்த சரவணன், அவரது நண்பனான அரவக்குறிச்சியை சேர்ந்த அஜித்திடம் தொடர்பு கொண்டு, இந்த விஷயத்தை பற்றி கூறியுள்ளார். அதற்கு அஜித் கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
சம்பவம் செய்யும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்றும், கைரேகைகள் பதியாமல் இருக்க கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்திவிட வேண்டும் என்றும், பயங்கரமாக திட்டங்களை தீட்டி கொடுத்துவிட்டு, தன்னால் வர முடியாது என்று தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
துடிக்க துடிக்க கொலை...! மூவர் கைது...
மேலும், இத்திட்டத்தை கைவிடக் கூடாது என்ற எண்ணத்தில் விமல்ராஜம் சரவணனும் ஒன்று சேர்ந்து, மிளகாய்பொடியை எடுத்து பாலசுப்ரமணியின் முகத்தில் தூவியுள்ளனர். இதில் கண் எரிச்சல் தாங்காமல் தவித்த பாலசுப்ரமணியின் பின் தலையில் இரும்புராடால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலசுப்ரமணியனை நெற்றி, முகம், போன்ற பகுதிகளில் கொடூரமாக குத்தி உள்ளனர். இதில் பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலையும் பாலசுப்பிரமணி வண்டியிலிருந்த பெட்ரோலையும் திறந்துவிட்டு அவர் உடலை தீ வைத்து எரித்து விட்டு தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அம்மாவட்ட துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறையினர், குற்றவாளிகளான விமல்ராஜ், சரவணன் மற்றும் கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த அஜித் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீடுகளை நோட்டமிட்டு திருட முயற்சி: சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்