மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வார திங்கள்கிழமை மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெறும். தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர், தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்தப் போலீசார், வாலிபரிடமிருந்து மண்ணென்ணைக் கேனை பிடுங்கி எறிந்து அவரை காப்பாற்றினர்.
பின்னர் அவரை கைது செய்த போலீஸார், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை விசாரணை செய்ததில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சேர்ந்த வினோத் குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. இவர் தனியார் ஏஜென்சியில், சிங்கப்பூரில் வேலைக்காக 1.80 லட்சம் கொடுத்துள்ளார். பிப்ரவரி 19-ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற வினோத் குமாருக்கு கொடுப்பதாக கூறிய வேலை இல்லாமல் மாற்று வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினோத் குமார், ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர்கள் சரியான விளக்கம் கொடுக்காததால், 21-ஆம் தேதி திரும்பி வந்துள்ளார்.

பின்னர் நேரில் சென்று ஏஜென்சியிடம் பணத்தினை திருப்பி கேட்டவருக்கு, சரியான முறையில் பதிலளிக்காததால், மனமுடைந்த அவர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏஜென்சியிடமிருந்து பணத்தினை வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.