கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் ஊராட்சி, நத்தவெளி சாலையில் குடியிருந்த விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகள் அகற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், 'அவர்களுக்கு உடனே மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
சி.என் பாளையம் மாதா கோயில் தெருவில் வசிக்கும் மக்களுக்கு இடுகாட்டுப் பாதையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளுக்குக்காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.
அதன்படி, விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேயிலை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!