நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கை அறிவித்து, பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கட்டுபாடு விதித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 11 நாள்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் ஏழை எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளிகள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பணம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென அதிமுக தலைமைக் கழகம் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் நிவாரண பணிகளில் இறங்கி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா என்பவர் தனது பகுதியில் உள்ள 1200 குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் காய்கறிகளை இலவசமாக வழங்கினார்.
வெங்காயம், தக்காளி, முருங்கை பீட்ரூட் உள்ளிட்ட 16 வகையான காய்கறிகள் அடங்கிய இந்த பைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வர அச்சமாக இருக்கின்ற சூழ்நிலையில் வீடு வீடாகச் சென்று காய்கறிகளை வழங்கியது பெரிதும் நன்மை பயத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : கோவையில் இறைச்சி கடைகளுக்கு தடை