மதுரை மாவட்டம் ஐயர் பங்களா பகுதியில் ராமநாதன் என்பவர் ஸ்ரீராம ஜெயராம் என்ற பலசரக்கு கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று (பிப்.12) இரவு வழக்கம்போல் கடை பணிகளை முடித்துவிட்டு ராமநாதன் வீட்டிற்குச் சென்றுள்ளார். நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக மர்மநபர்கள் உள்ளே வந்துள்ளனர்.
ஆனால், கடையில் உள்ள கல்லாவில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றும் அடைந்த திருடர்கள், பலசரக்கு கடையில் இருந்த பூஸ்ட், ஹார்லிக்ஸ், அரிசி, பருப்பு, எண்ணெய் என வீட்டுக்குத் தேவையான சுமார் ரூ.15,000 மதிப்பிலான மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
கடையின் உரிமையாளர் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யப்படும் பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதால், கடையில் திருட முயன்ற மர்ம நபர்கள் பணம் இல்லாமல் ஏமாந்து உள்ளனர். இருப்பினும் நூதன முறையில் மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வழக்கம்போல் மறுநாள் காலை கடையை திறந்த உரிமையாளர் பொருட்கள் திருடுப்போயிருப்பதை அறிந்து, தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.