பொள்ளாச்சி - ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகப் பகுதிகளான சேத்துமடை, மாங்கரை வனப்பகுதிகளில் முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக, வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் துணை கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி வனத்துறையினர் மயிலாடுதுறை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான ஜெயபால், கனகராஜ், கார்த்தி, குமார் ஆகிய நான்கு பேரை வனத்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முள்ளம்பன்றியை வேட்டையாடுவது தெரிய வந்தது.
இதையடுத்து வேட்டை ஆடிய முள்ளம்பன்றியை கைப்பற்றி, நான்கு நபர்களையும் ஆனைமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் முள்ளம்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக தலா ஒருவருக்கு ரூ.13,000 என மொத்தம் 52,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டையாடினால், கடும் தண்டனை விதிக்கப்படும் என வனச்சரகர் காசிலிங்கம் அவர்களை எச்சரித்தார்.