கோயம்புத்தூர்: கோவை ஜி.டி. அரங்கில் மக்கள் சேவை மையம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் ’அமுதம் திட்டம் தொடக்க விழா’ சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமுதம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தினையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாய்மனதுடன் இந்த முயற்சியை வானதி சீனிவாசன் செய்து இருக்கின்றார்.
இதற்குத் துணையாக ரோட்டரி அமைப்புகளும், மளிகைக் கடைகளும் துணை நிற்கின்றனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுடன் இணைந்து அவர்களுக்குத் தேவையானதை செய்ய பிரதமர் மோடி எங்களுக்கு முன்னோடியாக இருக்கின்றார்” என்றார்.
மேலும், பாஜக அரசு வந்தால்தான் இது போன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என வானதி சீனிவாசனை புகழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக அரசு அமைக்க, தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களைப்பெறுவதற்கு, இங்கு வந்துள்ள அனைவரின் உதவியும் தேவை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்வு நேரத்தில் வீடுகளை இடிக்கலாமா?-பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்