கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகின்றன. பொள்ளாச்சி வனக்கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு யானைகளுக்கு என தனித்துவமான கணக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் வரை ஒரே நேரத்தில் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி குழுவில் 34 குழுவில் 102 வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த யானைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் 25 வன கோட்டங்களில் உள்ள 465 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. இந்த யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபடும் வனச்சரக அலுவலர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு பொள்ளாச்சி வன கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் அட்டகட்டியில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
பயிற்சியில் பங்கேற்ற வனத்துறையினருக்கு தரவுகள் சேகரிப்பு தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டன. யானைகள் கணக்கெடுக்கும் பணியின் முதல் நாளான இன்று கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் வன பகுதிக்குள் 15 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று நேரடியாக யானைகளை கணக்கிட்டு பதிவு செய்வர். இரண்டாம் நாளான நாளை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நேர்கோட்டு பாதையில் செல்வர். பின், யானைகளின் சாணம் வாயிலாக மறைமுக கணக்கெடுப்பை நிகழ்த்துவர்.
யானைகள் கணக்கெடுப்பின் இறுதி நாளான நாளை மறுநாள், இயற்கை மற்றும் செயற்கை நீர் நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடியாக யானைகளைப் பார்த்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும் என ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள துணை இயக்குனர் பார்கவ தேஜா தெரிவித்து உள்ளார். பொள்ளாச்சி வனச்சர கோட்டத்துக்கு உட்பட்ட வில்லோணி பீட் பகுதியில் வனத்துறையினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதே வேளையில் வனசரகர்கள், வால்பாறை வெங்கடேஷ், மானாம்பள்ளி, மணிகண்டன், உலாந்தி, டாப்சிலிப் சுந்தரவேல் ஆகியோர் தலைமையில் யானைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. யானைகள் கணக்கெடுப்பு பணி, குளிர்கால கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு என நடைபெறும் பொழுது அட்டகட்டி பயிற்சி மையத்தில் தன் ஆர்வலர்கள், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
பயிற்சி நிறைவிற்குப் பின்னர் இவர்கள் வனப் பகுதிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறும் இந்த யானைகள் கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யானைகள் கணக்கெடுப்பில் அதன் எச்சங்கள், நேர்கோட்டு பாதையில் கால் தடங்கள் மற்றும் அதன் வலசுப் பாதை போன்றவற்றைக் கொண்டு மூன்று நாட்களில் யானைகள் கணக்கெடுக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் தலைமை அலுவலகத்தில் யானைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் விவரங்கள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என உதவி வன பாதுகாவலர் செல்வம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் வனசரகர்கள் புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தென்காசியில் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது!