கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஐந்து மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்.
பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆறு தனிப்படைகளை அமைத்து பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் தேட உத்தரவிட்டார். சிசிடிவியைக் கொண்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
ரகசிய தகவல்
ஆனைமலை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரை விசாரணை செய்ததில், ராமர் என்பவர் மூலம் அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற நபருக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.
மூன்று பேர் கைது
முத்துப்பாண்டிக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் குழந்தை இல்லாததால், ராமரிடம் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்ட நிலையில் ராமர், முருகேசன் இருவரும் சேர்ந்து குழந்தையைக் கடத்தியுள்ளனர். இதையடுத்து ஆனைமலை காவல் துறையினர் ராமர், முருகேசன், முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் கைதுசெய்து இன்று (அக். 1) பொள்ளாச்சி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
குழந்தை கடத்தல் வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல் துறையினரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: 'கபில்சிபில் கருத்து பாஜக ஆசையை நிறைவேற்றும் செயல்' - கே.எஸ். அழகிரி