ஒரு மனிதன் 40 வயதைக் கடந்ததும் வாழ்நாள் முழுவதும் துரத்தும் பிணி சர்க்கரை நோய். பல நேரங்களில் இந்நோய் குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை. வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்காக இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்த பிரெட்ரிக் பேண்டிங்கை கௌரவப்படுத்தும்விதமாக, அவரது பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதியை உலக சர்க்கரை நோய் தினமாக அறிவிக்கப்பட்டது.
உடலில் இன்சுலின் உற்பத்தி, அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் ஏற்படும்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் முதல் வகை இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று டுவது. இரண்டாவது, இன்சுலின் சுரக்கும் ஆனால் முறையாகப் பயன்படுத்த முடியாது. இந்த நோய் 90 விழுக்காட்டினருக்கு உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
இந்நோய் குழந்தைகளுக்கும் ஏற்படும். அவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோகூட ஆபத்தில் முடியலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுப்படுத்துதல், மருத்துவர் ஆலோசனை ஆகியவற்றைப் பின்பற்றினால், நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
உடல் எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதன் அறிகுறிகள். தொடக்கத்திலேயே இதற்கு மருத்துவம் எடுக்கத் தவறினால் கண், இதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.