சென்னை: எம்ஆர்சி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்த மாணவன் ஒருவர் தன்னுடைய ஒன்றரை சவரன் செயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்றுள்ளதாக இரு தினங்களுக்கு முன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டறிந்தனர். இவர்கள் ராயப்பேட்டையில் செயின் பறிப்பு வழக்கு ஒன்றில் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் அர்ஷத் மற்றும் ஹரிஹரசுதன் என்பது காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இதனையடுத்து மறுநாள் வழக்கம்போல் செயின் பறிப்பு கொள்ளையர்களான ஹர்ஷத் மற்றும் ஹரிஹரசுதன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும்போது காவல் துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செயின் பறிகொடுத்த பள்ளி மாணவனின் நண்பர்கள் சொன்னதன்பேரில், தாங்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
நடந்தது என்ன? இதனையடுத்து செயின் பறிப்பில் தொடர்புடைய இரண்டு பள்ளி மாணவர்களையும் காவல் துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாக்குமூலம் அளித்த பள்ளி மாணவர்கள் விபத்து ஒன்றை ஏற்படுத்தியதால் பணம் தேவைப்பட்டதாகவும், அதற்கு நகை அதிகம் அணிந்திருக்கும் தனது நண்பனை பள்ளியின் அருகிலுள்ள மறைவான இடத்தில் மது அருந்துவதற்காக அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மது வாங்குவதற்காக தங்களில் ஒருவர் சென்றதாகவும், அந்த நேரத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்களை செயினை பறிக்க அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் கூறியபடி செயின் பறிப்பு கொள்ளையர்கள் செயினை பறித்துச்சென்றுள்ளனர். அப்போது உடனிருந்த தாங்களும் உதவுவது போல் நாடகமாடியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டாம்; பெற்றோர்களிடம் மாட்டிக்கொள்வோம் என செயினை பறிகொடுத்த பள்ளி மாணவனிடம் நாடகம் ஆடியுள்ளனர். மேலும் காவல் துறை விசாரணையில் பள்ளி மாணவர்கள் மது, கஞ்சா போன்ற பல்வேறு போதைகளுக்கு அடிமையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. செயினை பறித்து வரும் பணத்தின் மூலம் கஞ்சா போதைக்கும் மாணவர்கள் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு செயின் பறிப்பு நிகழ்த்த திட்டமிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் செயினை பறித்த கொள்ளையர்கள் ஹர்ஷத் மற்றும் ஹரிஹரசுதன், செயினை விற்க உதவிய கிஷோர் ஆகியோரை பட்டினப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவர்கள் இருவரையும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கேஸ் ஸ்டவ் முதல் குக்கர் வரை... வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் திருடிய திருடர்கள்!