கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பாதிப்பு அதிகமுள்ள எட்டு மாவட்ட ஆட்சியர்களோடு, மருத்துவ வல்லுநர் குழுவோடும் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
மே மாதம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவது, கரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ள சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களோடு தலைமைச் செயலர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
அவர்களுடன் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, காவல் துறைத் தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்று தலைமைச் செயலர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து தமிழ்நாட்டில் தற்போதுள்ள கரோனா தாக்கம் குறித்தும், மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு இன்று அல்லது நாளை ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.