இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் மறு வாக்குப்பதிவுகோரி கொடுத்த திமுகவின் மனுவிற்கு இதுவரை எவ்வித தீர்மானமான உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியது ஏன்? மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குப் பதில் உத்தரவே வராத நிலையில் ரகசியமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றது ஏன்?
வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து திமுக தரப்பில் புகார் அளித்தவுடன், தவறு செய்த 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அலுவலர் புதிய விளக்கம் கொடுக்கிறார். 46 வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிந்தவுடனோ அல்லது இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்படும் வரையிலோ தலைமைத் தேர்தல் அலுவலர் வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? துணை முதலமைச்சரின் மகன் தேனி தொகுதியில் போட்டியிடுவதால், குறிப்பாக வாரணாசியில் பிரதமரைச் சந்தித்த பிறகு அதிமுக அரசுக்கும், தலைமைத் தேர்தல் அலுவலருக்கும் இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகள் என்ன? எந்த அடிப்படையில் 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்தார்?
தேர்தல் ஜனநாயகத்தில் விபரீத விளையாட்டுக்களை நடத்திட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக தலையிட்டு, தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக உடனடியாக திரும்பப் பெறப்பட உத்தரவிட வேண்டும். இதற்கு காரணமான அலுவலர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வேட்பாளர் அல்லது அவர்களின் முகவர்களுக்கு தெரிவிக்காமல் எந்த வாக்குப்பதிவு இயந்திரங்களையும் இனி எந்தத் தொகுதிக்கும் மாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.
இதுவரை மறு வாக்குப் பதிவிற்கு தலைமை தேர்தல் அலுவலர் பரிந்துரைத்துள்ள விவரங்கள் குறித்தும், அவர் கூறும் 46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும். ஆளுங்கட்சியின் தலையீடுகளின் காரணமாக, தமிழகத்தில் நிகழும் முறைகேடுகளுக்கு இடையே தலைமைத் தேர்தல் அலுவலர் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகவும் தடுமாறி நிற்கிறார் என்பது நன்கு தெரிகிறது. ஆகவே, எஞ்சியிருக்கும் நாட்களுக்கு உடனடியாக மாநில சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ஒருவரை நியமித்து, தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.