ஜெர்மனியைச் சேர்ந்த கோத்தே கலாசார மையம் சார்பில் கோயம்புத்தூர், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கால்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ’தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளில் இருக்கின்ற இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்கள் விளையாடுவதற்காக அரசு தரப்பில் 66 கோடியே 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு குழுக்களைச் சேர்ந்த 36 மாணவர்கள் மற்றும் 4 பயிற்சியாளர்கள் ஜெர்மனி நாட்டிற்கு செல்லவுள்ளனர்.
இந்த அரசுதான் விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 37 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கனவு இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கு பணம் அவசியம் தேவை’ என்றார்.