முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் கோரிக்கை விடுத்து இன்று (நவ.19) #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் காலையில் இருந்து ட்விட்டர் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#ReleasePerarivalan இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, இயக்குநர் அமீர், ஆர்யா, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், ஜிவி பிரகாஷ், இயக்குநர் பா. இரஞ்சித், பிசி ஸ்ரீராம், சிம்புதேவன், நவீன் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை ஆளுநர் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாளின் 29 வருடப் போராட்டம் இது. ஒரு குற்றமற்றவருக்கு விடுதலைக் கொடுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உச்ச நீதிமன்றம் தீர்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, நிரபராதியான சகோதரர் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது. இந்த தத்துவத்தின் படி உருவாக்கப்பட்டது தான் இந்திய தண்டனைச் சட்டம். உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதியளித்த பிறகும் வழக்கைப் பதிவு செய்த காவல்துறை அலுவலர் இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்று சொன்ன பிறகும் கூட 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிரபராதி பேரறிவாளன் சிறையில் வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையான விஷயம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா, நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல. அவரது தாய் அற்புத அம்மாளும் தான் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சமுத்திரக்கனி, அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிகவும் கவலையளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சரே, மேதகு ஆளுநரைச் சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக என கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், தீர்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால் இந்த அலுவலரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களை நம்பவேண்டியிருக்கிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஒரு குற்றமும் செய்யாதவருக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெறஒரு தாயின் 30 வருடப் போராட்டம். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர் நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். தயவு செய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழக்கையை வாழ விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழவேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் .. குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்...! என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என தெரிவித்துள்ளர்.

இயக்குநர் சிம்புதேவன், அந்த தாயின் துயருக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! முப்பது வருட போராட்டம் முடிவுக்கு வரட்டும்! என தெரிவித்துள்ளார்.