தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சை பெற 22 அரசு மருத்துவமனைகளை அங்கீகரித்து தமிழ்நாடு அரசு முன்னதாக உத்தரவிட்டது. தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், 112 தனியார் மருத்துவமனைகளை கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக அறிவித்த அரசு, விரும்பியவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த நான்கு ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தை வசூலிக்காமல், அதைவிட அதிகமாக 6,000 முதல் 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், மேல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு முழு உடல் கவசத்திற்காக 10,000 ரூபாயும், வென்டிலேட்டர் கருவிக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், அறை வாடகையாக 5,000 முதல் 12,000 ரூபாய் வரையும் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் கரோனா சிகிச்சை வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஒழுங்குப்படுத்துவதோடு, கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நாளை (ஜூன் 3ஆம் தேதி) காலை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க : திருச்சியில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி