ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவிண்டபாடி, கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் கரும்பு அதிக விளைகிறது. இப்பகுதிகளில் விளையும் கரும்பில் இருந்து கிடைக்கும் நாட்டுச்சர்க்கரை கொண்டு தான் பழநியில் உள்ள முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நாட்டுச் சர்க்கரையில் எந்தவொரு வேதிபொருட்களும் கலக்காமல் பழநி கோயிலுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பழனி கோயில் இணை ஆணையர் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாமிர்தம் தயாரிக்க ஈரோடு கரும்பு விவசாயிகளிடம் இருந்து நாட்டு சர்க்கரை கொள்முதல் வேண்டாம் என கோயில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சாமிர்தம் தயாரிக்க பழனி கோயில் நிர்வாகம் நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் இருந்தே நாட்டுச்சர்க்கரையை கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி ஈரோட்டை சேர்ந்த விவசாயி செங்கோட்டையன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஆதிகேசவலு, நாட்டுச்சர்ககரை கொள்முதல் தொடர்பாக அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் இணைஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்
.