சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில சுற்றுச்சூழல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கான வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், மத்திய அரசின் நபார்டு நிதி உதவியுடன் ரூ. 281 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பறவைகளுக்கான வாழ்விட ஆதாரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 1,400 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்பொழுது பல்வேறு ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 700 ஏக்கர் பரப்பளவிலான சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சதுப்பு நிலங்கள் அதிகம் இருந்தால் மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நில சுற்றுச்சூழல் பூங்கா முதல் கட்டமாக ரூ. 61 கோடியில் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது இப்பகுதி மக்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாள்தோறும் நடை பயிற்சிக்கு வருகைதரும் மக்களின் எண்ணிக்கையும், பார்வையிட வருகைதரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி மத்திய அரசின் நபார்டு நிதி உதவியுடன் ரூ.281 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பறவைகளுக்கான வாழ்விட ஆதாரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் இதுபோல் நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களை பாதுகாத்திட முதல் கட்டமாக 100 இடங்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
வன விலங்குகளால் தாக்கப்படுபவர்களுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்பொழுது உடனுக்குடன் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: தற்கொலை தீர்வல்ல - மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை