சென்னை: நுங்கம்பாக்கத்தில் எல்.எஸ்.டி ஸ்டாம்ப் எனும் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சந்திரசேகர், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆஷிஷ், கொளத்தூரைச் சேர்ந்த அக்சயாகுமார் ஆகிய இளைஞர்களைக் கடந்த 2018 ஜனவரி 4ஆம் தேதி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா விசாரித்தார். அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜராகினார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், மூளையை அதிகமாகத் தூண்டி, சிந்தனை, கவனம், உணர்வுகள் ஆகியவற்றிலும், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி., எனப்படும் லைசர்கைட் என்ற போதைப்பொருள், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளதாகக் கூறி, சந்திரசேகருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமாக 40 ஆயிரம் ரூபாயும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். ஆஷிஷ், அக்சயகுமாருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.