சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் பற்றி இயற்றப்பட்ட பாடலையும் அவர் வெளியிட்டார்.
உதயநிதி பிறந்தநாள் விழா
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் பயன்படும் வகையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்.
உதயநிதி அமைச்சராக வர வேண்டும்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் பலன் கிடைக்கும்.
பள்ளி வளாகங்களில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்தமாக தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றுவதற்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அடுத்த நான்கு, ஐந்து மாதங்களில் நடைபெறும்.
விவசாயிகளுக்கு நிவாரணம்
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நிவாரணம் பெற்று வழங்கப்படும். அதற்கான நிதியைப் பெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினை பார்த்து தமிழ்நாடு பாராட்டுகிறது, போற்றுகிறது - கே.எஸ்.அழகிரி