சென்னை: எத்தியோப்பியா நாட்டுத்தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் அதிக அளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதால், இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த அஸ்சுரா முஹம்மத் சஃபானி (வயது-49) என்ற பெண், சுற்றுலாப் பயணி விசாவில் சென்னை வந்திருந்தார். இவர் மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவருடைய உடைமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது அவா் அணிந்திருந்த காலணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே, காலணிகளை ஆய்வு செய்தனா். அவைகளில் மறைத்து வைத்திருந்த 600 கிராம் எடையுடைய மெத்தோ குயிலோன் என்ற போதைப்பவுடரை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இதை அடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தான்சானியா நாட்டுப்போதைப் பொருள் கடத்தல் பெண் பயணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக எத்தியோப்பியன் விமானத்தில் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தி வருவதும், சுங்கத்துறை அலுவலர்கள் கடத்தல்காரா்களை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க:திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி