சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நிவாரணம்
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் கடந்த 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
- முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு பணிக்குழு, பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கீடு செய்ய வேண்டும். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
- சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தரவுகளை பெற்று கணக்கீடு செய்ய வேண்டும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகளை, மாவட்ட வாரியாக உள்ள குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு கட்டாயமாக ஆஜர்ப்படுத்த வேண்டும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும்பட்சத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படும்.
- தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, பிரதமரின் நிதியுதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, புத்தகங்கள் இந்த நிதியில் இருந்தே வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட குழந்தை நல அலுவலர், தலைமை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் கொண்ட 6 பேர் அடங்கிய குழு அமைத்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பூசி தந்த காந்த சக்தி?' - உடலில் ஒட்டிக்கொள்ளும் பொருள்கள்