மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 14 புலம்பெயர் தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு முன் வேலைக்காக தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்கள் 14 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 14 பேரும் வேலைவாய்ப்பு இழந்து, வருமானமின்றித் தவித்து வந்தனர். மேலும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத சூழ்நிலையால், அவர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவக் கல்லூரி முகாமில் தங்கி இருந்தனர்.
தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு, உள்நாட்டு விமான சேவை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து தங்களது உறவினர்களிடம் பணம் அனுப்புமாறு கூறி, அவர்கள் அனுப்பிய பணத்தில் ஆன்லைன் மூலம் 14 தொழிலாளர்களும் மேற்கு வங்கம் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, தனியார் வாகனம் மூலம் சென்னை வந்த தொழிலாளர்கள், விமான நிலைய சோதனைச் சாவடிக்கு சென்றபோது, இன்று மேற்கு வங்கம் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள், இதை முன்கூட்டியே எங்களுக்கு அறிவித்திருந்தால், நாங்கள் புதுக்கோட்டையில் தங்கியிருந்து இருப்போம். தேவையில்லாமல் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சென்னை வந்திருக்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவை மையத்தில் கேட்டதற்கு, அவர்கள் முறையான பதிலை அளிக்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் கேட்ட போது, மீண்டும் மேற்கு வங்கம் செல்லும் விமானம் 10 நாட்களுக்குப் பிறகுதான் இயக்கப்படும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்ததாகவும், இதனால் நாங்கள் செய்வதறியாமல் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருவதாகவும், தங்களை விரைவில் சொந்த ஊருக்கு அனுப்ப வழிவகை செய்யுமாறும் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.