சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரைச் சேர்ந்தவர் கீதா (24). இவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் சிலையின் அருகே நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் கீதா அணிந்திருந்த 11 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றபோது கீதா தாலியை கெட்டியாகப் பிடித்து இருந்ததால் ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தாலி செயினை பறிக்க முடியாமல் தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு பல்லாவரம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண்குமார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் மதுரையில் கஞ்சா வியாபாரிகளாக இருந்ததும் தெரியவந்தது.
மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய், கார்த்திக் ஆகியோருடன் பல்லாவரத்தைச் சேர்ந்த மற்றொரு தினேஷ்குமாரைச் சந்தித்து பல்லாவரம், குரோம்பேட்டை, பீர்கன்காரணை உள்ளிட்ட காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனங்களைத் திருடி அதனைக் கொண்டு செயின் பறிப்பதுமாக இருந்துள்ளனர்.
தினேஷ்குமார் மீது மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவர்களிடமிருந்து நான்கு சவரன் நகை, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்செய்த நிலையில் தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக முன்னிறுத்தி ஐந்து பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆவடியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!