சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் கவிதா. இவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வேலைக்கு சென்ற கவிதா வீட்டிற்குத் திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து இளம்பெண்ணை தேடி வந்த நிலையில், அவர் பணிபுரிந்த கம்பெனி உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் கவிதாவை திருப்பூரில் அடைத்து வைத்திருப்பதும் தனிப்படையினருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் கவிதாவை மீட்டனர்.
பின்னர் கவிதா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேஷ் பிரித்வியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி நிறுவனம் ஒன்றை தொடங்கி மருத்துவச் சீட்டு பெறுவதாக கூறி, பலரை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து போலி ஆதார் கார்டு, பான் கார்டு் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.