சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஒரு பருவத்தில் 85 விழுக்காடு வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூபாய் 1000 அபராதக் கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்டவேண்டும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், ''தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 பருவங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மே, ஜூன் மாதங்களிலும், 2ஆம் பருவத்திற்கான தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வினை தனியார் கல்வியியல் (பிஎட், எம்எட் ) கல்லூரிகளில் நடத்தாமல், அரசு, அரசு உதவிபெறும் அல்லது பிஎட் பட்டப்படிப்பினை தனியார் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தப் பருவத்திற்கான தேர்வினை சுமார் 50ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனனர்'' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கணேசன் கூறுகையில், '' பி.எட் பட்டப்படிப்பில் முதல் பருவம் மற்றும் எம்.எட் பட்டப்படிப்பில் முதல் மற்றும் 3ஆவது பருவத்தில் படிக்கும் மாணவர்கள் 100 நாட்கள் வருகைபுரிய வேண்டும்.
பி.எஸ்சி, பி.எட்; பி.ஏ பி.எட் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள் 125 நாட்கள் வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை புரியாத மாணவர்களின் பட்டியலை வரும் 6ஆம் தேதிக்குள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் tnteuattendance@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அனைத்து மாணவர்களும் பாடத்திட்டத்தை படித்திருக்கும் வகையில் 85 விழுக்காடு வருகை புரிய வேண்டும். அவ்வாறு வருகைபுரியாமல் 75 விழுக்காடு முதல் 84 விழுக்காடு வரையில், வருகைப்பதிவு உள்ள மாணவர்கள், அதற்கான மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம் என பல்கலைக் கழகத்தில் விதி உள்ளது. மேலும் வருகைப் பதிவு குறைந்ததற்காக ரூபாய் 1000 அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

மருத்துவ விடுப்பில் சென்றதற்கான சான்றிதழ்கள் தற்பொழுது ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து வழங்கப்பட வேண்டி உள்ளது. இதனால், சரியான காரணம் இன்றி மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிக்கல் ஏற்படுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுலவர் உள்ளிட்ட முக்கியப்பதவிகளிலும் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SSLC Exam: வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும் தேர்வு எழுதலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்