SlCCl என்றழைக்கப்படும் தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் தொழில்துறையினர், இந்தியாவுக்கான பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர் ரேமன் எஸ். பகத்சிங்குடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பகத்சிங், பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில் தொடங்குவது பற்றியும், அங்குள்ள கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றியும் தொழில்துறையினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
இந்தியா பிலிப்பைன்ஸ் இடையேயான வர்த்தகம் 14ஆம் நூற்றாண்டிலிருந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், இந்தியாவிலிருந்து எருமை இறைச்சி, பால் பொருள்கள் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறினார். மேலும் இரு நாடுகளும் உணவு பதப்படுத்துதல் துறையில் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பேசிய தென்னிந்திய வர்த்தக சபை தலைவர் கணபதி, "இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் நீண்ட காலமாக கலாசார வர்த்தக உறவு இருந்துவருகிறது. இருநாடுகளுக்கும் இடையே ஏராளமான தொழில் வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமலே உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும் வகையிலும், இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து விவசாயப் பொருள்களின் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சித்துவருகிறோம். இதுதவிர, பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகளவில் உள்ளது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு ரூ. 10 கோடி அளவில் ஆடுகள் விற்பனை!