சென்னை: ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அலுவலரான வெங்கடாச்சலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல்துறையில் பணிபுரிந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு தகவல் வந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம், வேளச்சேரியில் உள்ள அவரது வீடு, சொந்த ஊரான சேலத்தில் உள்ள வீடு என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனையை மேற்கொண்டனர்.
பறிமுதல்
விடிய விடிய நடைபெற்ற சோதனையில், ரூ. 13.5 லட்சம் பணமும், ரூ. 3 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெங்கடாசலத்தின் வீட்டில் சந்தனக்கட்டைகள் இருந்ததாதல், இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக கடந்த ஏப்ரலம் மாதம் மட்டும் அவசர அவசரமாக 60க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கிய வெங்கடாசலம், கோடிக்கணக்கில் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.
முறைகேடுகள்
2013-2014ஆம் ஆண்டுவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும், 2017,2018ஆம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராகவும் இருந்த அவர், தனது பதவிகாலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி வஉசி துறைமுக எஸ்டேட் பகுதியில் கட்டுமானம் கட்டுவதற்கு எஸ்இபிசி எனும் தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு தகுதியில்லாத நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பணியில் அமர்த்தியுள்ளார்.
புதிய தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களிடம் அனுமதிச் சான்று வழங்கவும், தொழிற்சாலை அமைக்கும் பகுதியில் நடவேண்டிய மரக்கன்றுகளை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் அதிகவிலைக்கு வாங்க நிர்பந்தித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு வனத்துறையில் இவர் பணிபுரியும்போது, ஜெனரேட்டர், பாய்லர் உள்ளிட்ட முக்கியப் பொருள்களை அதிகவிலைக்கு வாங்கி அரசுக்கு 47 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமைச்சருக்கு தொடர்பு?
இவர் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெங்கடாசலத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருக்கும் வெங்கடாசலம் செய்த ஊழல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், அதுதொடர்பான ஆவணங்களை கைப்பற்றும் முயற்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி