இது தொடர்பாக அவர் இன்று(நவ.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு - குடிநீர் வழங்குவதற்கும் திமுக நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டுகிறேன்.
புயல் - மழை பாதிப்புப் பகுதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்கிடக் கோருகிறேன்.

பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர், திமுக உடன்பிறப்புகளே! ‘நிவர்’ புயல் நேரத்தில் நிவாரணமாக அமையட்டும் திமுகவினரின் உதவும் கரங்கள். வடகிழக்குப் பருவமழை முற்றுப் பெறும்வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு