இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் கூறியுள்ளதாவது, "தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சில இடங்களில் மக்கள் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகிறது.
மேலும் சிறுவர்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. கவனக்குறைவு காரணமாக தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் விபத்துக்கள் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த தீபாவளியை கொண்டாட வேண்டும். எனவே பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலைமையாசிரியர்கள் இதுகுறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
பட்டாசுகளை கொளுத்தும் போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். டெரிகாட்டன், டெரிலின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கும் இடத்திற்கு அருகாமையில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையில் வைத்துக்கொண்டோ வெடிக்க வேண்டாம்
மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். ராக்கெட்டுகளை வெட்டவெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள். பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும், சாலைகளிலும் வெடிக்காதீர்கள். பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோரின் முன்னிலையில் அவர்களது மேற்பார்வையின் கீழ் வெடிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும், அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவோ, கொளுத்தவோ செய்யாதீர்கள்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும், மனநிலையையும் பாதிக்கும், காதுகள் செவிடாகக் கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
மகிழ்ச்சி நிறைந்த விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.