சென்னை: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கல்லூரி புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேருந்து நிலையத்தில் இருந்துதான் பள்ளி படிக்கும் போது பேருந்தில் பயணம் செய்தேன். இப்போதும் கல்லூரி காம்பவுண்ட் சுவரில் கலை, தமிழ் கலாச்சாரம் பற்றி ஓவியங்கள் தீட்டப்பட்டு கொண்டிருக்கக்கூடிய காட்சியை அடிக்கடி பார்ப்பதுண்டு.
உயர் கல்வி பொற்காலம்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி கட்டுப்பாட்டுக்கு பெயர் போன கல்லூரி. 75 ஆண்டுகளை கடந்துள்ள இந்த கல்லூரியில் படித்த பல்லாயிரக்கணக்கான மாணவிகள் உலகம் முழுவதும் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்லூரி இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கல்வி என்பது வெறும் பட்டமல்ல, அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது. இத்தகைய குணங்களையும் உருவாக்கக்கூடிய நிறுவனமாக இந்த கல்லூரி செயல்பட்டு வருவதை நன்றாக அறிவேன்.
மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியது மாபெரும் சேவை ஆகும். உயர் கல்வியில் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், ஆற்றலில் மேன்மை அடைய, 'நான் முதல்வன்' என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
உயர் கல்வியில் பொற்காலம் என்று சொல்லத் தக்க வகையில் உயர் கல்வியில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. கல்லூரி காலம் வாழ்வில் இன்னொரு முறை கிடைக்காது. எனவே, கல்லூரி காலத்தை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வரும் கல்வி ஆண்டிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு