சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 32ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், இன்றுடன்(செப்.12) பணி ஓய்வு பெறுகிறார். கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கோயில் அர்ச்சர்கர்கள் ஆகம விதிப்படி தான் நியமிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது,
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினியை விடுதலை செய்ய மறுத்தது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது,
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது, கோயில் சொத்துக்களை அரசு சொத்துக்களாக கருத முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புக்ளை வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெறுவதையொட்டி, உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பிரிவு உபசார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், குறுகிய காலத்தில் பதவியேற்ற நேரத்தில் கூறியபடி நீதி பரிபாலனத்தை விரிவுபடுத்தியதாகக் கூறி, அவர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.
பதவிக்காலத்தில் 7 வணிக நீதிமன்றங்களைத் தொடங்கி வைத்ததுடன், 116 நீதிமன்ற அறைகளுடன் 10 மாடி நீதிமன்ற கட்டடத்துக்கும், பழைய சட்டக் கல்லூரி புதுப்பிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் வழக்கறிஞர்களால் நினைவில் கொள்ளப்படும் என்றார்.
ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்ற போது தமிழ்நாட்டில் பிறக்க விரும்பியதாகவும், தற்போது அந்த ஆசை அதிகமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார். சக நீதிபதிகள் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும், நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க அவர்கள் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தியைத் தருவதாக கூறினார். நாட்டிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்ட உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமானது எனவும், திறமையை வெளிப்படுத்தக் கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், சட்ட அமைச்சரும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசுத்துறை செயலாளர்களும் மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதாக பாராட்டு தெரிவித்தார். கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் காட்டிய அன்பை நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்வதாகவும், தன்னை மறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.