சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது அண்மைக் காலமாக காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும், மாறி மாறி பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (செ.6) அறிவித்திருந்தது.
இதன்படி சென்னை, கோவை, ராணிப்பேட்டை மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கடந்த இரண்டு மணி நேரமாக மழை பெய்தது. சென்னை நகரும், அதன் புறநகரிலும் மழை பெய்தது.
மேலும், சில இடங்களில் கனமழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. அதேபோல் சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. மேலும், அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
போக்குவரத்து நெரிசல்: சென்னை மற்றும் புறநகரில் மாலை 7 மணி அளவில் தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்ததால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அனைவரும் மழையில் சிக்கினர். இதனால் சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, உள் வட்டச்சாலை, ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைவிடாத மழை காரணமாக சென்னையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. அதேபோல் கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை, தி நகர் மேட்லி சுரங்கப்பாதை, போரூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வரும் இடத்திலும் மழை நீரானது தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் அடுத்த இரண்டு நாட்களுக்குதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது இன்று வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!