சென்னை: இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து சுதந்திரத்துக்காக போராடியவர் கண்ணையா. இவரது மனைவி மாரியம்மாள். இவர் ஒன்றிய அரசின் தியாகிகளுக்கான உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்தார்.
வாரிசு குறித்த தகவலை கண்ணையா தெரிவிக்கவில்லை எனக் கூறி மாரியம்மாளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாரியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி வைத்தியநாதன் அமர்வு நேற்று (ஆக. 7) விசாரித்தது.
விண்ணப்ப நிராகரிப்பு உத்தரவு ரத்து
அப்போது பேசிய நீதிபதி, “சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும்போது, வாரிசு பெயர் குறிப்பிடவில்லை எனக்கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது. மாரியம்மாளின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு தியாகிகளுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு வழங்கும் என நான் நம்புகிறேன்.
1947ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த பலருக்கு சுதந்திர போராட்டங்கள் எப்படி நடந்தது என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பது இல்லை. அனைவரும் சுதந்திரத்தால் கிடைத்துள்ள பலனை அனுபவித்து வருகின்றனர். ஒருசிலர் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: வல்லநாடு பாலம் தொடர்பான வழக்கு - மாவட்ட ஆட்சியர், தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவு