திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் சென்னையில் பல பகுதிகளிலும், திருப்பூர் போன்ற பெருநகரங்களிலும் வேலை செய்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல நூற்றுக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
அவர்களை, முறைப்படி பதிவு செய்து அனுப்ப தமிழ்நாடு அரசு உடனடி ஏற்பாடுகளை செய்யவேண்டும். சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்ப ரயில் மூலம் தான் சாத்தியம். அதைத் தாமதிக்காமல் செய்யலாம்.
அங்கே அவர்கள் சில நாள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகளை, அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள பரஸ்பர ஏற்பாடுகளை மத்திய அரசே ஒருங்கிணைக்கலாம். அதுபோலவே, வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாகவும், கல்விக்காகவும் சென்றுள்ள தமிழ்நாட்டவர்கள், தமிழ்நாடு திரும்ப விழைவது இயற்கை.
அங்கே அவர்கள் வேதனையில் விம்முகின்ற நிலையை மாற்றி - எல்லா நாடுகளிலும் இருக்கிற தமிழ்நாடு திரும்ப விரும்புவோரை, விமானப் பயணங்கள்மூலம் விரைவாகத் திரும்ப அழைக்க மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அப்படி வருவோரை தனிமைப்படுத்தி, பரிசோதனைகள் நடத்தி மருத்துவரீதியான நடவடிக்கைகளை விமான நிலையங்களில் செய்து, நேரே எந்தப் பகுதியில் தங்க வைக்க வேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று, போதிய உணவு, குடிநீர், போதிய இடைவெளிகளையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தி, பாதுகாப்புடன் அவர்கள் வீடு திரும்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டியது அவசர அவசியம்.
முதலமைச்சரும், மத்திய உள்துறை, ரயில், விமானப் போக்குவரத்து போன்றவைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். கரோனா கொடுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து அத்தகையவர்களை மீட்க இம்முயற்சிகள் பெரிதும் உடனடியாகத் தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!